Monday, January 05, 2009

502. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று - TPV20

திருப்பாவை இருபதாம் பாடல்

கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்

செஞ்சுருட்டி ராகம், மிச்ரசாபு தாளம்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.


பொருளுரை:

"தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்துமூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!

கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!"

பாசுரச் சிறப்பு:

திருப்பாவையில், இதுவே நப்பின்னை பிராட்டியை துயிலெழுப்பும் கடைசிப் பாசுரம். ஆனால், கண்ணன் தெளிவாக துயில் விலக இன்னும் 2 பாசுரங்கள் ஆகும் :)

இந்த 20வது பாசுரம் உபநிடதம், கீதை சார்ந்த சில விஷயங்களை உள்ளடக்கியிருப்பதாக பெரியோர் கூறுவர். 17வது பாசுரம் (அம்பரமே தண்ணீரே) அகரத்திலும், 18வது பாசுரம் (உந்து மதகளிற்றன்) உகரத்திலும், இந்த 20வது பாசுரம் மகரத்திலும் தொடங்குகிறது. இவை மூன்றும் சேர்ந்து (அ + உ + ம்) வேதசாரமான "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தைக் குறிப்பதாக ஒரு உள்ளுரை உண்டு.

இப்பாசுரத்திலுள்ள ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டும், கோதை நாச்சியார், பரமனை 2 தடவை துயிலெழ வேண்டுகிறாள் (கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் & வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்), அவனைச் சரணடைவதே பிரதானம் என்பதை முன்னிறுத்தி!

அடுத்தபடியாக, பிராட்டியை மிகவும் போற்றிப் பாடி (ஒரு தடவையே) அவளைத் துயிலெழ வேண்டி (செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்), சென்ற பாசுரத்தில் நப்பின்னையை சற்று கடிந்து சொன்னதற்கு (நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்!) பரிகாரம் செய்து விடுகிறார் ஆண்டாள்!

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.


என்று பாடி, கோபியரது உய்வுக்கு புருஷகாரம் செய்யும்படி (பரிந்துரைக்குமாறு) நப்பின்னையிடம் ஆண்டாள் விண்ணப்பிக்கிறாள்!!!

வைணவத்து சம்பிரதாயப்படி திருமகளும் (மற்ற ஜீவாத்மக்களைப் போல) பரமாத்வான நாராயணனைச் சார்ந்தவள் தான் என்றாலும், அவளின்றி பரமன் முழுமை அடைவதில்லை என்ற அழகான தத்துவச் செய்தியை ஆண்டால் இப்பாசுரத்தில் சொல்கிறாள் ! பிராட்டியின் முன்னிலையில் தான் ஜீவாத்மாக்களுக்கு முக்தி கிடைக்க முடியும்!

இப்பாசுரத்திலும் பரமனின் பக்தரைப் பேணும் பாங்கும், பகைவரை அழிக்கும் தன்மையும் பாடப்பட்டன. அதற்குத் தேவை 2 குணங்கள்: செப்பமும், திறலும்.

இதைத் தானே நம்மாழ்வாரும் "செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்- செய்குந்தா*" என்று கீழ்க்கண்ட பாசுரத்தில் பாடியுள்ளார்!

வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


செப்பம் என்பதன் பொருள் குறைகள் அற்ற (அப்பழுக்கற்ற) தன்மை (Perfection)
திறல் என்பதற்கு 'எங்கும் நிறைந்து அனைத்தையும் சீர் தூக்கிப் பார்க்கும் தன்மை' என்று பொருள் கொள்ளலாம்.


இங்கு கோபியர்கள், "முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று" என்று தேவர்களைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? 'தேவர்களுக்கு, அமுதம் வேண்டும், தேவலோகப் பதவி வேண்டும், பலம் வேண்டும், ஆனால் எங்களுக்கோ உனையன்றி வேறு எதுவும் வேண்டாம்' என்றும் 'தேவர்களோ சாகாவரம் பெற்று விட்டனர் உன் அருளால், ஆனால் நாங்களோ நின்னருள் வேண்டி இப்பூவுலகில் உழன்று கொண்டிருப்பதைக் காண், எங்கள் துயர் போக்குவாய்!' என்றும் கோபியர் குறிப்பில் சொல்கின்றனர்.

பாசுர உள்ளுரை:

முப்பத்து மூவர் - தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்

முன் சென்று - தீவினைகள் நோக்கி நாங்கள் செல்வதற்கு முன்பாகவே, இன்னல்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே

கப்பம் தவிர்க்கும் கலியே - அச்சங்களை விலக்கி அபயமளிக்கும் பரமன்

செப்பமுடையாய் - நேர்மையான சொரூபம் கொண்டவன், வலிமை மிக்கவன்

திறலுடையாய் - எங்கும் நிறைந்த பரம்பொருள், சாதுரியம் மிக்கவன், உலக ரட்சகன்

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா - அனைவரையும் சமமாக பாவிப்பவனாக இருந்தாலும், அடியவருக்குத் துன்பம் தரும் பகைவர்களின் செருக்கை அழிப்பவன். தீயவர் தன் மீது கொள்ளும் பகைமையைக் கண்டு பரமன் ஒருபோதும் கோபம் கொள்வதில்லை!

விமலன் - இதனுடன் சேர்த்து மொத்தம் 4 சொற்கள் உள்ளன: அமலன், விமலன், நிமலன், நிர்மலன்.

அமலன் - நம் தீவினைகளை அழிப்பவன்
விமலன் - அஞ்ஞானம் நெருங்க முடியாதவன்
நிமலன் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருபவன்
நிர்மலன் - தன்னிடம் சரணடைந்தவரின் குறைகளை ஆராயத தன்மை கொண்டவன்!


செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் - திருமகளின் சௌந்தர்யமான (அனைத்து அழகையும் தன்னுள் கொண்ட) தோற்றத்தைப் போற்றுவதாம்.

நப்பின்னை நங்காய் திருவே - சொல்லிச்சொல்லாத சௌந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே, குணங்கள் அவளாலே, மேன்மை அவளாலே, நீர்மை அவளாலே, அப்படி திருவுக்கு நிகரானவளே! திருவே!

உக்கமும் தட்டொளியும் தந்து - அகங்கார மமகாரங்களை நீக்கி மெய்ஞானத்தை அருளி

இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்! (Accord us Moksham HERE and NOW!). "நீராட்ட" என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது (திருப்பாவையில் எல்லா இடங்களிலும்)

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*

எ.அ.பாலா

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by the author.
உயிரோடை said...

வ‌ழ‌க்க‌ம் போல‌ அருமையான‌ ப‌திவு. நம்மாழ்வாரை மிக‌ பிடிக்குமா அண்ணா உங்க‌ளுக்கு? இத்தனை முறை நீராட்ட சொல்லி இருப்ப‌து ஒரு வேளை மார்க‌ழில‌ ம‌க்க‌ள் சோம்ப‌ல் ஆயிடுவாங்க‌ என்ப‌தாலா? ச‌ரி கோவிக்காதீங்க‌. ந‌ல்ல‌ ப‌திவு. ந‌ன்றி

Bala said...

மிக அருமையான விளக்கம்.
ஶ்ரீவைஷ்ணவத்தின் திரண்ட கருத்து ,🙏🙏🙏🙏

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails